» »Unlabelled » இப்பவும் எப்பவும் அமிதாப் மட்டும்!

பேசும் படம் என்பது இதுதான்! இளையராஜா, பி.சி.ஸ்ரீராம், பாலா, பால்கி என இந்திய சினிமாவுக்குப் பெருமை சேர்க்கும் தமிழர்களின்  அபூர்வ சந்திப்பு. சசிகுமார் நடிக்க பாலா இயக்கும் படத்துக்கு இசை... இளையராஜா. அமிதாப், தனுஷ், அக்ஷரா நடிக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில் பால்கி இயக்கவிருக்கும் படத்துக்கு இசையும்.. அவரே! இந்த இரண்டு படங்களின் பாடல் பதிவுகளின் நடுவே இந்தச் சந்திப்பு.
அமிதாப்பை வைத்து 'சீனிகம்’, 'பா’ என இரண்டு வித்தியாசமான படங்களைக் கொடுத்த பால்கியின், மூன்றாவது படத்திலும் அமிதாப் தான் ஹீரோ. இந்தி சினிமா வட்டாரத்தில் இப்பவே எக்கச்சக்க எதிர்பார்ப்பு. பால்கியிடம் பேசினேன்...
''உங்க ஃபேவரைட் அமிதாப், பாலிவுட்டுக்குப் புதுப் பையனான தனுஷ், நடிக்கவே மாட்டேன்னு  சொல்லிட்டு இருந்த அக்ஷரா... எப்படிப் பிடிச்சீங்க இந்த வித்தியாச காம்பினேஷன்?''
''கொஞ்சம் வித்தியாசமான படம். இப்போதான் ஆரம்பிச்சிருக்கோம். இன்னும் டைட்டில்கூட வைக்கலை. நிச்சயமா ரசிகர்களை ஈர்க்கும்னு நினைக்கிறேன். 'திரும்பவும் அமிதாப்பா?’னு நீங்க கேட்டா, 'எப்பவும் அமிதாப்தான்’னு சொல்வேன். அப்படி ஒரு லெஜெண்ட் அவர். உண்மையைச் சொல்லணும்னா, என் படங்களில் அவர் தொடர்ந்து நடிக்கிறது என் அதிர்ஷ்டம். நான் கொஞ்சம் வித்தியாசமாக் கதை சொல்ற ஆளு. கதையை யோசிச்சிட்டு ஆர்ட்டிஸ்ட்டை யோசிச்சா, எனக்கு அமிதாப் தான் கண் முன்னாடி வர்றார்!''


'அமிதாப், ஷாரூக் கான் நடிக்கப்போறதா பேச்சு இருந்தது. தனுஷ், அக்ஷரா எப்படி உள்ளே வந்தாங்க?''
''தனுஷை நான் ரொம்ப நாளாக் கவனிச்சுட்டு வர்றேன். அவர் பார்க்கத்தான் சின்ன உருவம். ஆனா, பெரிய நடிகன். விளையாட்டுத்தனமான ஸ்கூல் பையனோ, வெறி பிடிச்ச கேங்ஸ்டரோ... எந்தக் கேரக்டருக்கும் செட் ஆவார். அது தனுஷோட ப்ளஸ். படத்தில் மூணு ஹீரோ. ஒண்ணு அமிதாப். இன்னொண்ணு தனுஷ். மூணாவது ஹீரோ அக்ஷரா. கவனிங்க... படத்தில் அவங்க ஹீரோயின் கிடையாது. தனுஷ§க்கு ஜோடியும் கிடையாது. மும்பையில் ஒரு விளம்பர ஷூட்டிங்ல அக்ஷராவைப் பார்த்தேன். அசிஸ்டென்ட் டைரக்டரா வொர்க் பண்ணிட்டு இருந்தாங்க. கேமராவுக்குப் பின்னாடி அக்ஷராவோட பாடிலாங்வேஜ், ஸ்டைல், ஸ்லாங் எல்லாமே யுனிக்கா இருந்தது. அவங்களை மனசுலவெச்சுத்தான் அந்த மூணாவது கேரக்டரைக் கதைக்குள் கொண்டுவந்தேன். அவங்க சும்மா வந்து நின்னாலே, அதில் செட் ஆவாங்க!''

''இளையராஜாவோட மூணாவது படம் பண்றீங்க..?''
''நடிப்பில் அமிதாப் மாதிரி, இசையில் இளையராஜா. நான் சின்ன வயசுல இருந்தே ராஜா இசை கேட்டு வளர்ந்தவன். முதலில் நான் ராஜா ரசிகன். அப்புறம்தான் இயக்குநர். ரசிகனா இருந்து இயக்குநரா அவரோட வேலை பார்க்கிறது நிச்சயம் எனக்குப் பெருமையான விஷயம். அவரோட மெலடிகள் ரொம்ப சிம்பிளா இருக்கும். ஆனா, அவ்ளோ அழகானது. அவர் அனுபவத்துக்கு முன்னாடி நான் எல்லாம் யாரு? ஆனா, 'இதுல என்னய்யா புதுசாப் பண்ணலாம்’னு ஆர்வமாக் கேட்பார். நான் எத்தனை படம் எடுப்பேன்னு தெரியாது. ஆனா, என் எல்லாப் படங்களுக்கும் ராஜாதான் இசை அமைக்கணும். இது என் ஆசை. அதே மாதிரி பி.சி-யும் என் ஃபேவரைட். அவர்கிட்ட சொல்ற வரைக்கும்தான் அது என் கதை. சொல்லி முடிச்சதும் பி.சி. அதைத் தன் கையில் எடுத்துக்குவார். இந்தப் படத்தை எப்படி எக்ஸ்போஸ் பண்ணப்போறோம்னு பெரிய ஆராய்ச்சியே பண்ணுவார். ஃப்ரேம் பை ஃப்ரேம் வொர்க் பண்ணுவார். கதையை வித்தியாசமாக் காட்ட புது ஆங்கிள் பிடிப்பார்!''
''அந்தச் சந்திப்பில் என்ன நடந்தது?''
''அது ஒரு தற்செயலான சந்திப்பு. என் படத்துக்காக நானும் பி.சி. சாரும் இளையராஜாவைப் பார்க்கப் போயிருந்தோம். அங்கே சர்ப்ரைஸா பாலா வந்தார். பாலு மகேந்திரா ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் திறக்கும்போதுதான் பாலா எனக்கு அறிமுகம். ஆனா, அவ்வளவு பழக்கம் இல்லை. 'நான் கடவுள்’ பார்த்ததில் இருந்து நான் அவரோட ரசிகன் ஆகிட்டேன். போன்ல பாராட்டினேன். அந்தச் சந்திப்பில் நான் என் படத்தின் கதையைச் சொன்னேன். அவர் அவரோட படம் பத்திச் சொன்னார். ரொம்ப நேரம் சினிமா, இசை பத்திப் பேசிட்டு இருந்தோம். ஒரு சந்திப்பிலேயே நல்ல நண்பர்கள் ஆகிட்டோம்!''
''அமிதாப் இந்த வயசுலயும் பல மணி நேர மேக்கப், புதுப்புது கெட்டப்னு இவ்வளவு மெனக்கெடுறார். தமிழ்ல அந்த ஆர்வம் யார்கிட்ட இருக்குனு சொல்வீங்க!''
''இங்கே கமல், சூர்யா, விக்ரம்னு கிட்டத்தட்ட லீடிங் ஆக்டர்ஸ் எல்லாருமே அந்தப் பரிசோதனை முயற்சிகள் பண்ணிட்டே இருக்காங்களே. எப்படி இருந்தாலும் கதைதான் இங்கே நாயகன். அதுக்கேத்த மாதிரி ஹீரோ மோல்டு ஆகிட்டா, அது தனி உலகம். புது அனுபவம்!''
''தமிழ்நாட்டில் பிறந்தவர் நீங்க. இந்தியில் ஹிட் டைரக்டர்... ஏன் தமிழ்ல படம் பண்றதில்லை?''
''எனக்கே அந்த வருத்தம் உண்டு. நான் நிறையப் படங்கள் பார்ப்பேன். ஒரு படம்  வித்தியாசமா இருந்தால்தான் எனக்குப் பிடிக்கும். ஏன்னா படம் பார்க்கிறது என்னைப் பொறுத்தவரைக்கும் பரவசமா, புது அனுபவமா இருக்கணும். எனக்குப் பிடிச்சதைத்தானே நான் மக்களுக்குக் கொடுக்க முடியும். அந்த மாதிரி வித்தியாசமான கதைகளைத் தேடித்தேடிப் பிடிக்கிறேன். அதில் எதெல்லாம் சினிமா பண்ண சாத்தியமோ, அதைக் கதையா மாத்துறேன். இதுக்கே நிறைய டைம் ஆகிடுது. அந்தக் கதைகளில் கரெக்ட்டா அமிதாப் செட் ஆவதால், வேற யாரையும் யோசிக்க முடியலை. தமிழ்ல படம் பண்ணணும்னு நிறைய ஆசை உண்டு. சீக்கிரம் அதுக்கேத்த மாதிரி கதையைப் பிடிக்கணும்!''


About Admin

Hi there! I am Hung Duy and I am a true enthusiast in the areas of SEO and web design. In my personal life I spend time on photography, mountain climbing, snorkeling and dirt bike riding.
«
Next
Get More Updates About Movies
»
Previous
Udhayanidhi Stalin And Santhanam 's Idhu Kadirvelan Kadhal From Feb 14th

No comments:

Leave a Reply