நம்பர்-1 காமெடியனாக வலம் வந்து கொண்டிருந்த சந்தானம், ”கண்ணா லட்டு தின்ன ஆசையா” படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறினார். இப்போது ஹீரோவாகவும் களம் இறங்கியுள்ளார். இவர் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். தெலுங்கில் வெளிவந்த மரியாதை ராமண்ணா படத்தை தான் தமிழில், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என ரீ-மேக் செய்துள்ளார். இப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான பிவிபி சினிமாஸ் தயாரித்துள்ளனர். தற்போது இப்படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகளில் சந்தானம் பிஸியாக உள்ளார். இந்நிலையில் சந்தானத்திற்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து சந்தானத்திடம் நாம் கேட்டபோது அவர் அளித்த சிறப்பு பேட்டி, எனக்கும், என் மனைவிக்கும் இடையில் எந்த பிரச்னையும் இல்லை. நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். இருதினங்களுக்கு முன்னர் கூட நாங்கள் குடும்பத்தோடு சாய்பாபா கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்தோம். அப்படி இருக்கையில் எங்களுக்குள் பிரச்னை என்று வீணாக வதந்தி பரப்பி வருகிறார்கள். நடிப்பு, தயாரிப்பு என்று நான் பிஸியாக இருக்கிறேன். என் வேலையை செய்து முடிக்க 24 மணிநேரம் எனக்கு போதவில்லை, கூடுதல் நேரம் தேவைப்படுகிறது என்றார்.
மேலும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் கதையை தனக்கு ஏற்றபடி மாற்றியுள்ளதாக தங்கள் மீது ஒரு குற்றச்சாட்டு உள்ளதே என கேட்டபோது, கதையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. கூடுதலாக சில காட்சிகளை சேர்த்துள்ளேன். உதாரணமாக தெலுங்கில் சோலோ ஸ்டார் என்ற ஒரு கேரக்டரே கிடையாது, ஆனால் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் சோலோ ஸ்டார் என்று நடிகை தேவயானியின் கணவர் ராஜகுமாரனை சேர்த்துள்ளேன். அதுமட்டுமின்றி தமிழக ரசிகர்கள் என்னிடம் நக்கல், நய்யாண்டி, கலாய்ப்பது போன்று தான் எதிர்பார்க்கிறார்கள். ஆகையால் நான் அந்தமாதிரி நடித்துள்ளேன். தெலுங்கில் அந்த ஹீரோ நடித்தது போன்று சாதுவாக நடித்தால் ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள். அதனால் தமிழக ரசிகர்களுக்கு ஏற்றபடி என் நடிப்பை மாற்றிவிட்டேன், மற்றபடி கதைகளில் எந்தமாற்றமும் செய்யவில்லை என்றார்.
No comments: